Sunday, July 4, 2010
இலக்குகளை அடைய 10 வழிகள்
மனம் போன போக்கில் வாழலாமா?
கால் போன போக்கில் நடக்கலாமா?
இலக்கு இல்லாத வாழ்க்கை இனிக்குமா?
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் இலக்கு என்பது அவசியம் என்று அறிஞர்கள் கூறுவது உண்மையா?
இலக்கு இல்லாத மனிதன் மாலுமி இல்லாத படகு போல தத்தளிப்பான் என்பது நிஜமா?
நீங்கள் நிர்ணயிக்கும் இலக்குதான் பிற்காலத்தில் உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கப் போகும் திருப்புமுனை.
இலக்கைத் தேர்வு செய்வதிலும், தேர்வு செய்த இலக்கை அடைவதிலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
இல்லாவிட்டால், வாழ்க்கையில் தோற்றவர்களின் பட்டியலில் உங்களின் பெயரும் இடம் பெற்றுவிடும்.-
நீங்கள் தேர்ந்தெடுக்கும் இலக்கு மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டிய அவசியமில்லை.
உங்கள் சக்திக்கு தகுந்ததாக இருக்கலாம்.
உங்கள் பொருளாதார வசதிக்கு ஏற்றதாக இருக்கலாம். உங்கள் உடல்நிலை ஒத்துழைக்கக் கூடிய அளவில் இருக்கலாம்.
இலக்குகளை வகுத்து அதை சிறிதுசிறிதாக அடைய முயற்சிக்கலாம்.
இலக்குகளை வகுத்து அவற்றை அடைவதற்காக பயணம் மேற்கொள்கிறவரா நீங்கள்?
அப்படியானால் இங்கே தரப்பட்டுள்ள 10 எளிமையான வழிகள் நிச்சயம் உங்களுக்கு வழிகாட்டும்.
முதலில் நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் தேர்வுசெய்யும் இலக்கு உங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த கூடாது.
உள்ளுக்குள் நடுக்கத்தை உருவாக்கக் கூடாது.
உங்களை சோர்ந்து போய் மூலையில் முடங்கச் செய்வதாக இருக்கக் கூடாது.
அவ்வாறு இருந்தால் அந்த இலக்கு உங்களுடைய இலக்கே அல்ல.
நீங்கள் வகுத்த இலக்குகள் மனதில் அச்சத்தை உருவாக்கினால் அவற்றை தயங்காமல் தூக்கியெறியுங்கள்.
அடுத்த இலக்கை தேர்வு செய்யங்கள்.
வழி&1
உங்கள் இலக்குகளை ஒரு நோட்டுப் புத்தகத்தில் தெளிவாக எழுதுங்கள்.
இலக்குகளை எழுதிப் பார்த்து, அவற்றை அடிக்கடி படித்து மனதில் பதிய வைத்தவர்களில் 80 சதவீதம் பேர் வெற்றி அடைந்திருக்கிறார்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, இலக்குகளை எழுதுங்கள்.
உங்கள் இலக்குகளை ‘ஸ்மார்ட்’ ஆக இருக்க வேண்டும் என்று கூறுவார்கள்.
உங்கள் இலக்கு குறிப்பிடத் தகுந்ததாக இருக்க வேண்டும்.
அளவிடக் கூடியதாக இருக்க வேண்டும்.
அடையக் கூடியதாக இருக்க வேண்டும்.
உங்களின் முயற்சிக்குப் பலன் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
கடைசியாக... குறிப்பிட்ட காலத்திற்குள் அடையக் கூடியதாக இருக்க வேண்டும்.
வழி&2
உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் வகுக்கும் திட்டங்கள் சிறியதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
அந்த திட்டத்தை எளிதில் செயல்படுத்தக் கூடிய வகையில் வகுத்துக் கொள்ளுங்கள்.
இலக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்குமாறு அமைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் வகுத்த திட்டத்தை, எழுதி வைத்த இலக்குகளை மாதம் ஒருமுறை மனதிற்குள் அசைப்போடுங்கள்.
வழி&3
உங்களுடைய இலக்குகளுக்கான காரணங்களை எழுதுங்கள்.
அந்த இலக்குகளை அடைவதற்கு உங்களை உந்தும் காரணிகளையும் எழுதுங்கள்.
அவை உங்கள் மனதிற்கு ஊக்கக் கிளச்சியையும், புத்துணர்ச்சியையும் அளிப்பவையாக இருக்க வேண்டும்.
நீங்கள் ஆழ்ந்து சிந்திக்கும்போது உண்மையில் அந்த இலக்குகள் முக்கியத்துவம் மிகுந்தவையாக இருக்க வேண்டும்.
இந்தக் காரணங்கள் இலக்குகளை பூர்த்தி செய்யும் விதத்தில் இருந்தால், மேற்கொண்டு உங்கள் பயணத்தைத் தொடருங்கள்.
வழி&4
நேர்மறையான எண்ணங்களை வளர்க்கும் வாக்கியங்களை எழுதுங்கள்.
அத்தகைய புதிய வாக்கியங்களை உங்களுக்கென்று உருவாக்குங்கள்.
‘‘என்னால் முடியும்.’’
‘‘ஒரு வாரத்திற்குள் முடித்து விடுவேன்.’’
‘‘என்னால் முடியாவிட்டால் வேறு யாரால் முடியும்?’’
நேர்மறையான எண்ணங்களை உருவாக்கி, தன்னம்பிக்கையை தழைக்கச் செய்யும் 3 அல்லது 5 புதிய வாக்கியங்களை உருவாக்குங்கள்.
இந்த வாக்கியங்கள் எப்போதும் உங்களின் தன்னம்பிக்கையைக் குறையாமல் பார்த்துக் கொள்ளும்.
வழி&5
உங்கள் மனதில் தோன்றிய இலக்குகளை உருவகம் செய்ய பழகிக் கொள்ளுங்கள்.
தெளிவாகக் கூறினால், கனவு காணுங்கள்.
நீங்கள் என்னவாக விரும்புகிறீர்களோ அது குறித்து அடிக்கடி மனதில் கற்பனை செய்யுங்கள்.
உங்கள் இலக்குகளை அடையும் வரை அந்த நினைப்பு உயிரில் கலந்திருக்க வேண்டும்.
மூச்சிலும் நிறைந்திருக்க வேண்டும்.
வழி&6
இதுவரை சொல்லப்பட்ட நடைமுறைகளை அன்றாட வாழ்க்கையில் அமல்படுத்துங்கள்.
காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் உங்கள் இலக்குகளை மனதில் அசைபோடுங்கள்.
தன்னம்பிக்கை அளிக்கக் கூடிய வாக்கியங்களையும், உற்சாகம் தரும் வாக்கியங்களையும் உரக்க உச்சரியுங்கள்.
அந்த இலக்குகளை உருவகம் செய்து பாருங்கள்.
இதோடு முடித்து விடக்கூடாது.
இலக்குகளை அடைவதற்கு நாள்தோறும், ஏதேனும் ஒரு நடவடிக்கை அல்லது திட்டத்தை வகுத்து செயல்படுத்துங்கள்.
அதை மறக்காமல் குறித்துக்கொள்ளுங்கள். பின்னர் செயலில் இறங்குங்கள்.
எத்தகைய சூழ்நிலை வந்தாலும் இலக்குகளை அடைவதற்கான அன்றைய நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்காதீர்கள்.
வழி&7
எதிர்மறையான எண்ணங்களை முதலில் துடைத்தெறியுங்கள்.
இலக்குகளை அடையும் உங்கள் நோக்கத்திற்கு அவைதான் தடைக்கற்கள்.
மனதில் எதாவது ஓர் ஓரத்தில் அவை ஒளிந்திருக்கும்.
நல்ல சிந்தனைகள் உருவாவதற்கும், நம்பிக்கையூட்டும் வாக்கியங்கள் மனதில் நிறைவதற்கும் நீங்களும், உங்கள் மனதுமே காரணம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
உங்கள் இலக்குகளை அடைவதற்கு துணை செய்யும் வாக்கியங்களை மனதில் அசைபோட ஒருபோதும் மறக்காதீர்கள்.
வழி&8
இலக்குகளை அடையும் முயற்சியில் நாள்தோறும் நீங்கள் பல்வேறு சவால்களைச் சந்திக்க நேரும்.
அந்தச் சவால்களை குறித்து வையுங்கள்.
அந்தச் சவால்களை சமாளிக்க நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை பதிவு செய்யுங்கள்.
முயற்சிகளில் நீங்கள் எதிர்கொண்ட தடைகளை வரிசைப் படுத்துங்கள்.
தடைகளைத் தகர்க்க நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் வெற்றிகளையும் குறித்து வையுங்கள்.
இவ்வாறு வரிசைப்படுத்தும் போதுதான், நீங்கள் சந்தித்த தடைகள் எத்தனை என்பது புரியும்.
அவற்றை தகர்க்க நீங்கள் மேற்கொண்ட வழிகள்... வெற்றி கிடைத்தது எப்படி என்பதை உணர்ந்து அடுத்த கட்டத்துக்கு நீங்கள் செல்ல உதவியாக இருக்கும்.
வழி&9
‘‘உன் நண்பன் யாரென்று சொல். உன்னைப் பற்றி நான் கூறுகிறேன்.’’
இப்படி ஒரு பழமொழி உண்டு.
உங்கள் இலக்குகளை அடைவதற்கு நல்ல நண்பர்கள் அவசியம்.
உங்கள் இலக்குகளை நோக்கிச் செல்வதற்கு அவர்கள்தான் உதவியாக இருப்பார்கள்.
உங்களுக்கு உந்துதலாக இருக்கும் நண்பர்கள் வட்டாரத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
அவர்களை நண்பர்களாக வைத்துக் கொள்ளுங்கள்.
முடிந்தால், இலக்குகளை அடைவதற்கு சிறந்த வழி காட்டியை தேடித் சென்று அவரிடம் நட்பு பாராட்டுங்கள்.
அவர், உங்களின் ஆசிரியராக, சகோதரராக, சகோதரியாக, நண்பராக, அண்டைவீட்டாராக இருக்கலாம்.
அவர்கள்தான் உங்களின் இலக்குகளை அடைவதற்கு ஊக்கமளிக்கும், உந்துதல் அளிக்கும் காரணிகளாக இருப்பார்கள்.
வழி&10
இலக்குகளை அடைய நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளில் சின்ன வெற்றி கிடைக்கிறதா?
அந்த வெற்றிக்கு உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்.
சிறு சிறு இலக்குகளை நிர்ணயித்து அதை எளிதாக அடையுங்கள்.
அந்த வெற்றியை நினைத்து மகிழுங்கள். அந்த மகிழ்ச்சி உங்களை உற்சாகப்படுத்தும்.
பாராட்டுக்களும், உற்சாகமான வார்த்தைகளுமே இலக்குகளை அடைவதற்கான நமது ஓட்டத்தை வேகப்படுத்தும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment